இந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் எப்படி உருவானது?

உலகிலேயே உயரமான போர்க்களமான சியாச்சினை பாதுகாப்பதிலும் தமிழர்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றர்.

ஆம் சியாச்சினை பாதுகாக்கும் பொறுப்பு தமிழகத்தை சேர்ந்த மெட்ராஸ் ரெஜிமென்டின் கையில்தான் இருக்கிறது.

இந்திய ராணுவத்திலேயே மிக பழமையான ரெஜிமென்டும் இதுதான். இந்தியா எடுக்கும் ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையிலும் அல்லது ராணுவம் தொடர்பான எந்த ஒரு ரகசிய நடவடிக்கையிலும் மெட்ராஸ் ரெஜிமென்டின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்.

இதன் தலைமையகம் உதகை அருகேயுள்ள வெலிங்டனில் உள்ளது.
இந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் எப்படி உருவானது?
கடந்த 1639ஆம் ஆண்டு சென்னை நகரம் உருவானது. தொடர்ந்து 1644ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை எழுப்பப்பட்டது. 1660ஆம் ஆண்டு ஈஸ்ட் இந்திய கம்பெனி முதன் முதலில் மெட்ராஸ் ரெஜிமென்ட் ஈரோப்பியன் என்ற பெயரில் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது.

எனினும் 1758ஆம் ஆண்டுதான் 100 சிப்பாய்கள் நாயக்குகள் கொண்ட படையாக உருவானது. மேஜர் லாரன்ஸ் என்பவர்தான் இதன் முதல் தலைவர். பிரிட்டிஷ் வீரர்களுடன் இந்தியர்களும் இந்த படைப்பிரிவில் இருந்தனர். தென்னகத்தில் இருந்த பிரெஞ்சு படையினருடன் போரிடுவதுதான் மெட்ராஸ் ரெஜிமென்டிடம முதலில் ஒப்படைக்கப்பட்ட பணி.
அந்த காலககட்டத்தில் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர்களிலும் மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.ஆனால் சுதந்திரத்துக்கு பின், இந்தியாவின் மிக முக்கியமான ரெஜிமெண்டாக மெட்ராஸ் ரெஜிமென்ட் உருவானது. இந்தியாவை பொறுத்தவரை எந்த ஒரு ராணுவ நடவடிக்கையும் முதலில் ஒப்படைக்கப்படுவது மெட்ராஸ் ரெஜிமென்டிடம்தான்.

தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்கள் மெட்ராஸ் ரெஜிமென்டில் பணியில் அமர்வதை ஒரு பெருமையாகவே கருதினர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைதான் முதலில் தேர்வு செய்வர். எனினும் தமிழகத்தை தலைமயிடமாக கொண்டு இயங்குவதால், இந்த ரெஜிமென்டில் தமிழர்கள்தான் அதிகமாக இடம் பெறுகின்றனர்.
பழமை வாய்ந்த இந்த ரெஜிமென்டின் பெருமைக்கு இரண்டே இரண்டு சான்றுகளை கூறலாம். ஒன்று இந்தியாவே அலறிய ஆபரேசன் புளு ஸ்டார். இன்னொன்று உலகமே கதறிய பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு. பஞ்சாப் மாநிலம் அமிர்தரசரஸ் பொற்கோவிலுக்குள் சென்று காலிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடியது இந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் படையினர்தான்.
அடுத்து வாஜ்பாய் அரசில் 1998ஆம் ஆண்டு அப்துல்கலாம் தலைமையில் பொக்ரானில் அத்தனை ரகசியமாக அணுகுண்டு வெடித்து காட்டியதும் இதே மெட்ராஸ் ரெஜிமென்ட்தான்.

அதுமட்டுமல்ல இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் பெருமை வாய்ந்த ராணுவத் தலைவர்கள் தங்களது கடைசிகாலத்தை மெட்ராஸ் ரெஜிமென்டில்தான் கழிக்க விரும்புவார்கள். இந்திய ராணுவத்தில் ஜெனரல் கரியப்பா, ஜெனரல் ஷாம் மானக் ஷா ஆகிய இருவர்தான் பீல்டு மார்ஷல் அந்தஸ்த்தை பெற்றவர்கள். இதில் பீல்ட் மார்ஷல் ஷாம் மானக் ஷா தனது கடைசி காலத்தை மெட்ராஸ் ரெஜிமென்டில்தான் கழித்தார்.

இப்படி பல பெருமைகளை பெற்ற மெட்ராஸ் ரெஜிமென்ட்தான் உலகிலேயே அதிக உயரத்தில் உள்ள போர்முனையை பாதுகாத்து வருகிறது. கிட்டத்தட்ட மைனஸ் 50 டிகிரிக்கும் குளிர் வீசும் போர் முனை இது. இந்தியாவில் எத்தனையோ ரெஜிமென்டுகள் இருக்க இந்த கடின பணியை மெட்ராஸ் ரெஜிமென்ட்தான் ஏற்று செய்து வருகிறது.பாகிஸ்தானும் இங்கு தனது ராணுவத்தினரை நிறுத்தியுள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானை முதலில் எதிர்கொள்வதும் இந்தியாவின் வால் பகுதியில் இருக்கும் தமிழர்கள்தான்.

மெட்ராஸ் ரெஜிமென்டின் போர்க்கள வார்த்தை என்ன தெரியுமா” ஏ வீர மதராசி அடி கொல்லு அடி கொல்லு” என்பதுதான்…

ஜெய் ஹிந்த்!

Advertisements

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-24 (மெட்ராஸ் டே… )

டற்கரையை ஒட்டிய நரிமேட்டையும், கரும்புத் தோட்டத்தையும் ஒரு வெள்ளைக்காரன் 16 ஆயிரம் வராகன் கொடுத்து வாங்கிய தினம்…. இதை நாம் மெட்ராஸ் தினம் என்று கொண்டாடுவது சரியா?


வெங்கடப்ப நாயக்கரின் கன்ட்ரோலில் இருந்த இந்த கடற்கரைப் பகுதியை பிரான்ஸிஸ் டே என்ற வியாபார ஏஜென்ட்,  இதே ஆகஸ்ட் 22-ம் தேதிதான் வாங்கினார். பிறகு அவர்களின் பாதுகாப்புக்காகவும், நமக்கும் பாதுகாப்பாக இருப்பதாகவும் சொல்லி கோட்டை கட்டினார்கள். சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் செய்தார்கள். வரி வசூலித்தார்கள். நம்மை ஆட்சி செய்தார்கள். அடிமைப்படுத்தினார்கள். அடக்கு முறை செய்தார்கள். இந்த நாளை நாம் கொண்டாட வேண்டுமா? என்று கேட்பவர்கள் ஒரு சாரார்.

எல்லா தீமையிலும் சில நன்மைகள் உண்டு. நான்கைந்து கிராமங்களாக, ஏரிகளாக, தோப்புகளாக இருந்த பகுதியை உலக நகரங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை வெள்ளைக்காரர்களையே சாரும். கடற்கரையை ஒட்டியுள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மண்ணடி காளிகாம்பாள் கோயில் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில், திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் கோயில் போன்றவை சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. 

அந்தக் கோயில்களுக்கும் முன்னரே இங்கே மக்கள் கிராமங்களாக வாழ்ந்தனர். ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அவை கிராமங்கள்தான். பிரான்ஸிஸ் டே வாங்கிய பிறகுதான் இதற்கு நகரத்துக்கான முகாந்திரங்கள் ஏற்பட்டன. ஒருவகையில் இந்தக் கொண்டாட்டங்கள் சரிதான்.

‘மெட்ராஸ் டே’ என்பது சரிதானா என்பது போலவே மெட்ராஸ் என்பது இன்று யாருக்குச் சொந்தமானதாக இருக்கிறது என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்று.
கூட்டிக்கழித்துப் பார்த்தால் சென்னையில் பிரபலமான பிரமுகர்கள் 1000 பேர் இருப்பார்கள். இவர்கள்தான் சினிமா, அரசியல், வணிகம், கலை என்ற பெயர்களில் அடிக்கடி செய்திகளில் வெளியாகிறார்கள். 

தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன், சிவாஜி, எம்.ஜி.ஆர். ரஜினி, கமல்… கே.வி மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, அஜித், விஜய், தனுஷ், சிம்பு…. பாரதிராஜா, பாலசந்தர், பாக்யராஜ், டி.ஆர்., வசந்த், எஸ்.ஜே.சூர்யா, பத்மினி, சரோஜாதேவி, ரோஜா, குஷ்பூ, தேவயானி, ராதா, அம்பிகா, காஜல் அகர்வால், ஹன்சிகா மோத்வானி… போன்ற எண்ணற்ற சினிமா கலைஞர்கள் புகழின் உச்சியைத் தொட்டனர்.

பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா டி.ஆர்., மூப்பனார், வாசன், ப.சிதம்பரம், வைகோ, விஜயகாந்த் என எத்தனையோ அரசியல் பிரமுகர்கள் சென்னையில் வலம் வந்தவர்களாகவும், வந்து கொண்டிருப்பவர்களாகவும் உள்ளனர்.
பாரதியார், புதுமைப்பித்தன், க.நா.சு, கல்கி, தி.ஜானகிராமன், கண்ணதாசன், வைரமுத்து, சுஜாதா என எத்தனையோ எழுத்தாளர்கள் கோலோச்சியதும், கோலோச்சிக்கொண்டிருப்பதும் சென்னையில்தான்.
அண்ணாமலைச் செட்டியார், மெய்யப்ப செட்டியார், அழகப்ப செட்டியார், ஸ்பிக், அமால்கமேஷன், டி.வி.எஸ்.,  கோயங்கா, ஜெமினி நிறுவனம், சன் நெட்வொர்க் போன்ற எண்ணற்ற நிறுவனங்கள்- நிறுவனர்களின் தொழில் இடமும் சென்னைதான். 

எம்.எஸ்.சுப்புலட்சுமி, ருக்மணி அருண்டேல், லால்குடி ஜெயராமன், வீணை காயத்ரி, சுதா ரகுநாதன் என எத்தனையோ இசைக்கலைஞர்களின்  புகழ் கொடி பறந்ததும், பறந்துகொண்டிருப்பதும் சென்னையில்தான். 

– இப்படி இந்த நேரத்தில் நினைவுக்கு வந்த சிலருடைய பெயரை இங்கே சொல்லியிருக்கிறேன்… இவர்கள் யாருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் இல்லை. இன்னும் இரண்டு மூன்று தலைமுறை இங்கேயே அவர்கள் வாழ நேர்ந்துவிட்டால், ஒருவேளை அவர்கள் தங்கள் சொந்த ஊர்களை சொந்தம் கொண்டாடாமல் மாறிவிடக்கூடும்.
விஷயம் இதுதான்… சென்னை என்பது சில நூறு பிரபலங்களால் ஆனது. அதில் சென்னையின் மண்ணின் மைந்தன் சில பத்து பேர்கள்தான். சென்னையில் உள்ள பிரபல ரௌடிகளும்கூட சென்னையைச் சேர்ந்தவர்கள்  இல்லை என்பதே வேடிக்கையான உண்மை. 

மதுரை, நெல்லை, கோவை, திருச்சி என சென்னை என்பது தமிழக மக்களால் நிரம்பியது. இங்கே குஜராத்தி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, வங்காளம், பஞ்சாபி என எல்லா இந்திய பிராந்திய மக்களும் வசிக்கிறார்கள். பெரு நகரம் அப்படி கலவையான மக்களைக் கொண்டதாகத்தான் இருக்கும். இத்தனை சுவாரஸ்யங்களும் கூட சென்னைக்கான ஒரு அடையாளம்தான்.

ஆனால் மெட்ராஸை சொந்தமாகக் கொண்டவர்கள் அயோக்கியர்கள் போலவும், அவர்கள் பேசும் மொழி கொச்சையானது என்றும், இந்த நகரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் பேசுவது இந்த மண்ணின் பூர்வக்குடி கிராமத்தவர்களை கேலி செய்வதாகும். எங்கெங்கிருந்தோ இந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்த 90 சதவீதம் பேர் செய்யும் தவறுகளை, மெட்ராஸ் மக்கள் சுமக்கிறார்கள்.
தினக்கூலிகளாக, ஆட்டோ ஓட்டுநர்களாக, கட்டடக் கொத்தனார்களாக, ரிக்‌ஷா ஓட்டுபவர்களாக, கூவம் கரை ஓரம் ஒதுங்கிப் போனவர்களாகப் பெரும்பகுதி சென்னை கிராமத்து மக்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

தருமமிகு சென்னை என்கிறார் வள்ளலார் பெருமான். தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்கிறது சரித்திரம். இந்த சென்னை நாளில் அதை நினைகூர விரும்புகிறேன்.
நிறைந்தது!

– தமிழ்மகன்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-23 (சென்னையில் தயாரிக்கப்பட்ட நாணயங்கள்!)

சென்னை, எத்தனையோ முரண்சுவைகளைக் கொண்டது. நகரத்து நெரிசல் உச்சமாக இருக்கும் ஒரு சாலைக்கு வில்லேஜ் ரோடு என்று பெயர். லேக் ஏரியா, வேப்பேரி என்று ஊருக்கே ஏரிகளின் பெயரை வைத்துக்கொண்டு, வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் சுமக்கும் பகுதிகள் இவை.


அப்படி ஒரு அழகிய முரண்பாடு தங்கசாலைக்கு உண்டு. நெருக்கடியும் மழை பெய்தால் சாக்கடையும் ரோட்டோர கடைகளில் சால்னா கைவண்டிகளும், ரிக்‌ஷாக்களும் பவனிவரும் சாலைக்குப் பெயர் தங்கசாலை.

இந்திய நாணயங்களும், பிரிட்டீஷ் நாணயங்களும் சேர்ந்து புழங்கிக் கொண்டிருந்த 19-ம் நூற்றாண்டின் மக்களுக்காக இந்தியாவின் வராகன்களும், பிரிட்டிஷாரின் ஜார்ஜ் படம் போட்ட நாணயங்களும் சேர்ந்தே தயாரிக்கப்பட்டன. அதற்கான நாணயத் தயாரிப்புக் கூடம் முதலில் கோட்டையில்தான் இருந்தது. பின்னர், ஏழுகிணறு என்று அழைக்கப்பட்ட இன்றைய வள்ளலார் நகர் பகுதியில் அந்தத் தயாரிப்புக் கூடம் இயக்கப்பட்டது. இன்றும் தங்கசாலை என்றும் மின்ட் என்றும் அந்தப் பகுதி அழைக்கப்படுகிறது. அங்கே வராகன், பகோடா உள்ளிட்ட இந்திய நாணயங்கள் தயாராகின. வராகன் என்பது திருமாலின் வராக அவதாரத்தைச் சின்னமாகப் பொறித்த நாணயமாகும். நாயக்கர் ஆட்சி கால இறுதிகட்டத்தில் இருந்த அந்த நாணயத்தில் அவர்கள் பின்பற்றிய வைணவக் கடவுளான வராக அவதாரச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

பகோடா என்பது காசுகளில் குறைந்த மதிப்பு உடையது. பகோடா என்ற உணவுப் பண்டத்தின் பெயர் அதற்கு ஏன் வந்தது என்பதற்கு, உல்டாவாக பதில் வருகிறது. அந்த நாணயத்தின் பெயர்தான் காலப் போக்கில் உணவுப் பண்டத்துக்கானதாக மருவியிருக்கிறது. கடலை மாவும், வெங்காயமும் கலந்து செய்யப்பட்ட அந்தப் பண்டத்துக்கு ஆதியில் என்ன பெயர் இருந்தது என்பது நான் விசாரித்த வட்டாரங்களில் தெரியவில்லை. அந்தப் பொட்டலம் அப்போது ஒரு பகோடா விலை.

ஒரு பகோடா கொடுத்தால் ஒரு பொட்டலம் கொடுப்பார்கள். காலப்போக்கில் பகோடா என்ற நாணயம் வழக்கொழிந்துபோனாலும் அந்தப் பொட்டலத்துக்குப் பகோடா என்ற பெயர் நிலைத்துவிட்டது என்கிறார்கள்.

மின்ட் என்று அழைக்கப்பட்ட அந்த நாணயக் கூடத்தில் வெகு ஆரம்பத்தில் தங்க மெருகேற்றப்பட்ட வெள்ளி நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. பிறகு வெள்ளி நாணயங்கள், வெண்கல நாணயங்கள் என தயாரிக்கப்பட்டன. சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்த நாணயங்கள்தான் இந்தியா முழுதும் புழங்கின என்பதற்காக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம். ஜார்ஜ் மன்னர்கள், விக்டோரியா ராணிகள் எல்லாம் இங்கே நாணய அச்சில் வார்க்கப்பட்டார்கள்.
தொண்டி காலணா என்ற பெயரில் ஒரு நாணயத்தை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். நாணயத்தின் நடுவே ஓட்டை இருக்கும். பலர் அதை இடுப்பில் கட்டியிருக்கும் அரைஞான் கயிற்றில் கோர்த்துக் கட்டியிருப்பார்கள். தாலிக்கயிற்றில் தங்கக் காசுகளைக் கோர்த்துக்கொண்டிருக்கும் பெண்களைப் போல ஆண்களுக்கு காலணா காசுகள் என நினைக்கிறேன். நிறைய இருக்கும்போது இடுப்பிலே கோர்த்து சேமிப்பார்களோ? அந்த நாணயங்கள் வழக்கத்தில் இருந்து மறைந்தபின்னும் சில தாத்தாக்களின் இடுப்பில் அவை நாணயங்களின் சாட்சியாக தங்கிவிட்டதைத்தான் நான் பார்த்திருக்கக் கூடும்.

மின்ட் பகுதியில் அச்சடிக்கப்பட்டு வந்த நாணயங்கள், பிறகு வேறு  இடத்துக்குப் பெயர்ந்து போய்விட்டது. நாணயங்களும் தங்கத்தில் இருந்து வெள்ளி, வெண்கலம், பித்தளை, செம்பு, அலுமினியம், நிக்கல் என்று அநியாயத்துக்கு தரம் தாழ்ந்து போய்விட்டது.

தம்பிடி, அரையணா, காலணா, ஓர் அணா, நாலு அணா, எட்டு அணா, பத்து அணா, முக்கா ரூபா போன்ற பிரயோகங்கள் இன்றும் சென்னையில் உண்டு. அதுவும் இன்றைய மின்ட் வாசிகள் அவை தயாரான இடம் இதுதான் என்பதே தெரியாமல்கூட பேசலாம்.
காலம் எல்லா வரலாற்றையும் காலில் போட்டு மிதித்துக்கொண்டு மதயானை போல போய்க்கொண்டிருக்கிறது. அப்படி புதைந்துபோன வரலாற்றில் இப்படியான சில செப்பு நாணயங்களைத் தேடி எடுப்பதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது.

தொடரும்…

-தமிழ்மகன்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-22 (சொன்னால் நம்ப மாட்டார்கள்!)

பணத்தின் மதிப்பு எங்கே போய் நிற்கிறது என்பதற்கு கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.


ஆரம்பத்தில் சென்னையில் பல்லவன் ட்ரான்ஸ்போர்ட் என்ற சிவப்பு நிற பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கும். இப்போது ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகளை விட சற்றே நீளம் குறைந்தது. டீசல் வாசனை அதிகமாக இருக்கும். அதனால், பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் வாந்தி எடுப்பது சாதாரணமாக இருக்கும். கொஞ்சம் முரட்டு வாகனம்தான். அத்தனை சொகுசாக இருக்காது. நின்றுகொண்டு பயணிப்பவர்கள் பிடித்துக்கொள்வதற்காக பஸ்ஸுக்கு நெடுக்காக இரும்பு பைப்பில் தோல் வார் ஆங்காங்கே தொங்கும். பெரம்பூரில் இருந்து சென்ட்ரலுக்கு பதினைந்து காசு. சென்னையில் எங்கிருந்து எங்கு சென்றாலும் 50 காசை தாண்டாது.

உலக வங்கியில் கடன் வாங்கித்தான் புதிய பேருந்துகள் விடப்பட்டன. சிவப்பு நிறத்தில் பேருந்துகள் இருக்கக் கூடாது என்ற உலக வங்கியின் நிபந்தனையின் பேரில் பஸ்கள் பச்சை நிறத்துக்கு மாறிப்போனதாக அன்றைய கம்யூனிஸ்ட் பேச்சாளர்கள் மேடையில் பேசினார்கள்.
பச்சை பேருந்து வந்த நேரத்தில் ஒவ்வொரு டெர்மினஸுக்கும் ஐந்து காசு கட்டணம் உயர்த்தப்படும் என்று 80-களில் அறிவிக்கப்பட்டபோது வெகுண்டு எழுந்தார்கள் மக்கள். அரசாங்கம் அந்த அறிவிப்பை வாபஸ் வாங்கிக்கொண்டது. இப்போது டெர்மினஸுக்கு ஐந்து ரூபாய் ஏற்றினாலும் யாரும் போராடுவது இல்லை. ஆதார் அட்டை வாங்குவதற்கும், அதை வோட்டர் ஐ.டி.யோடு இணைப்பதற்கும் வங்கியில் கணக்கு தொடங்கி, அதை கேஸ் சிலிண்டர் கணக்கை வரவு வைப்பதற்கும் மக்களை அலையவிடுவதால்… மக்களுக்கு அதற்கே நேரம் சரியாகிவிட்டது.
சரியான சில்லறை கொடுக்கவும் என்பது பஸ்ஸில் நிரந்தரப் பொன்மொழி. ஒரு காசு, இரண்டு காசு, அரையணா எனப்பட்ட மூன்று காசு, ஐந்து காசு, பத்து காசு, 20 காசு, நாலணா எனப்பட்ட 25 காசு, எட்டணா எனப்பட்ட 50 காசு ஆகியவை அப்போது இருந்தன. ஒரு ரூபாய் என்பது தாளில் மட்டும்தான் இருக்கும். நாணயமாக வரவில்லை. மக்கள் அடிக்கடிப் பயன்படுத்தும் பணங்கள் நாணயத்திலும் எப்போதாவது பயன்படுத்தும் பணங்கள் காகிதத்திலும் இருந்தது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் தாள்கள் பொதுவாக அப்பாக்களின் பாக்கெட்டுகளில் மட்டும்தான் இருக்கும்.

பள்ளிச் சிறுவர்கள் கையில் பத்து காசு இருந்தால் பணக்காரன். எட்டணா வைத்திருந்தால் கோடீஸ்வரன். அவன் பள்ளி இடைவேளைகளில் பால் ஐஸ் என்கிற வெண்மை நிற குச்சி ஐஸ் வாங்கிச் சாப்பிட்டு வயிற்றெரிச்சலைக் கிளப்புவான். மூன்று காசுக்கு குச்சி ஐஸ். ஐந்து காசுக்கு சேமியா ஐஸ், ஐந்து காசுக்கு ஆள்வள்ளிக் கிழங்கு, இரண்டு காசுக்கு மாங்காய் பத்தை என்று வியாபாரம் பின்னி எடுக்கும். கலர் சர்பத், நன்னாரி சர்பத் என பல்வேறு வண்ணங்களில் தெரு ஓரத்தில் பாட்டில்களில் சாய நீர் விற்பார்கள். இனிப்பாக இருக்கும். அந்த நாளில் குடித்தபோது உடம்புக்கு ஒன்றும் செய்யவில்லை.
பள்ளியில் இருந்து திரும்பும் வழியில் தெருக் குழாயில் ஒருவன் அடிபம்பில் தண்ணீர் அடிக்க, இன்னொருவன் குழாயில் வாய் வைத்து தண்ணீர் குடிப்பான். தண்ணீரில் சில நாளில் சின்ன மீன்கூட வரும். தலைப்பிரட்டை வரும். அதை ஒதுக்கிவிட்டுக் குடிப்போம். யாருக்கும் அதனால் சீக்கு வந்ததா என்று தெரியவில்லை. நானே ஓர் உதாரணம். ஆர்.ஓ., மினரல் வாட்டர்கள் வந்தபோது, ‘தண்ணியை பாட்டில்ல விக்றாங்கடா’ என்று கிண்டல் செய்வோம். யாராவது கையோடு தண்ணீர் பாட்டில் எடுத்துக்கொண்டு போனால் விநோதமாகப் பார்ப்போம். மெட்ராஸ் மிக வேகமாக எல்லாவற்றையும் மறந்து வருகிறது.

வாட்டர் பாட்டில் காலம் போய், வாட்டர் பிளஸ் காலம் வந்துவிட்டது. 
காசு என்பதன் மரியாதை வெகுவாக மாறிவிட்டது, அந்தக் காசுகளை சென்னையில் அச்சடித்த இடம் பற்றி அடுத்து பார்ப்போம்.

தொடரும்…


-தமிழ்மகன்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-21 (எம்டன் வந்தான்… எம்.ஜி.ஆர். வந்தார்! )

சென்னையில்,  “அவனா எம்டனாச்சே… !” என்ற சொல் வழக்கு கொஞ்ச காலம் முன்னாடிவரை சகஜமாக இருந்தது. எம்டன் என்பதை சிலர் எமன் என்ற அர்த்தத்தில் சொல்வர். சற்றே சரித்திரம் தெரிந்தவர்களுக்கு எம்டன் என்பது ஒரு கப்பலின் பெயர் என்பது தெரிந்திருக்கும்.


1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, இங்கிலாந்து நாட்டினருக்கு எதிராக இருந்த ஜெர்மானியர்கள்,  இங்கிலாந்தை தாக்குவதற்கு படை திரட்டி வந்தனர். இந்தியாவும் அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால், இந்தியாவும் ஜெர்மானியர்களுக்கு எதிராகப் பார்க்கப்பட்டது.

முதல் உலகப் போரில் இந்தியாவையே ஜெர்மானியர்கள் எதிர்த்தபோதும், இந்தியாவின் மீது முதல் உலகப் போரை ஒட்டி குண்டு வீசப்பட்ட இடம் என்ற பெருமை (?) சென்னைக்கு உண்டு.

எம்டன் என்ற போர்க் கப்பல் சென்னை துறைமுகத்தில் வந்து நின்றது. 1914, செப்டம்பர் 22-ம் தேதி,  எதற்கும் இருக்கட்டும் என்று சென்னை கரையை நோக்கி குண்டு வீசியது. சென்னை உயர் நீதிமன்ற கட்டடத்தில் வந்து விழுந்த அந்த குண்டு, அங்கே ஒரு பெரும் பள்ளத்தை ஏற்படுத்தியது. ‘தொடர்ந்து குண்டுகள் வீசப்படும்.. சென்னை நகரம் அழிக்கப்படப் போகிறது…!’ என்று செய்தி பரவியது.
சென்னை மக்கள் சிலர் தங்கள் சொத்துக்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு சொந்த ஊருக்குச் சென்றதும் நடந்தது. சிலர் போட்டது போட்ட படி வீட்டைப் பூட்டிக் கொண்டு தமது உறவினர் வீடுகளை நோக்கி வெளியூர் சென்றனர். அடுத்து குண்டு வீச்சுகள் எதுவும் நடக்கவில்லை என்றாலும், எம்டன் கப்பல் அந்த இடத்தில் இரண்டு நாட்களுக்கு மௌனமாக நின்றிருந்தது. பிரிட்டீஷ் படையும் பதிலுக்குத் தயாரானது.

‘சென்னை நகரம் அழிக்கப்படும்’ என்று புரளி கிளப்புபவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது. குண்டு விழுந்த அந்த இடத்தில் ஒரு நினைவுக் கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கிறது.
சென்னை நகரத்தின் கதையை எழுதிய மா.சு.சம்பந்தன், குண்டு விழுந்த நேரத்தில் தெறித்த சேறு,  ஃபர்ஸ்ட் லைன் பீச் பகுதியில் இருந்த பல கட்டடங்களின் மீது பட்டு இருந்ததாக மக்கள் பேசிக்கொண்டதைப் பதிவு செய்திருக்கிறார்.

இவ்வளவு அச்சுறுத்தலாக இருந்த எம்டன் கப்பலைத்தான் சென்னை மக்கள் ‘அவனா எம்டன் ஆச்சே’ என்று அடையாளப்படுத்தினர். 

‘எம்டன்’ என்று ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டபோது ஏதோ சரித்திரக் குறிப்பு, திரை உலகில் நின்று நிலைக்கப்போகிறது என்று எதிர்பார்த்தேன். எம்டன் என்பது ஆங்கில வார்த்தை என்று அந்தப் படத்துக்கு அரசின் சலுகை மறுக்கப்பட்டது. எம்டன் என்பது ‘எம் மகன்’ என்று மாறி, தமிழ் காப்பாற்றப்பட்டபோதும் எம்டன் நிராகரிக்கப்பட்டதில் எனக்குள் ஒரு மெல்லிய சோக இழை ஓடியது.

எம்டன் கப்பலை ஒட்டி ஒரு சர்ச்சை எழுந்தது நினைவுக்கு வருகிறது. எம்.ஜி.ஆர். தம் பிறந்த நாளை கொண்டாட மாட்டார். அன்றைய நாளில் நடிகர், நடிகைகள் தங்கள் வயதைச் சொல்வதை பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். அல்லது குறைத்துச் சொல்லி வந்தனர்.

ஒரு முறை எம்.ஜி.ஆர். ஒரு பேச்சில் சென்னையில் எம்டன் குண்டு வீசப்பட்டபோது தாம் கைக்குழந்தையாக இருந்ததாகவும், சென்னையில் நிலவிய பதட்டம் தனக்கு நினைவிருப்பதாகவும் சொன்னார். இது அன்றைய எம்.ஜி.ஆர். எதிரிகளிடம் பெரிய ஆதாரமாக மாறியது. ‘எம்டன் குண்டு 1914-ல் வீசப்பட்டது. அப்போது அவருக்கு இரண்டு வயது என்று வைத்துக்கொண்டாலும் 1917-ல் பிறந்ததாக அவர் சொல்வது அப்பட்டமான தவறு. ஐந்து வயதைக் குறைத்துச் சொல்கிறார்’ என்று எழுதினார்கள், பேசினார்கள்.

‘என்னுடைய சிறுவயதில் எம்டன் குண்டு பற்றி பெரியவர்கள் பதட்டமாகப் பேசியது நன்றாக நினைவிருக்கிறது என்றுதான் சொன்னேன். எம்டன் குண்டு விழுந்த பத்து வருடங்கள் கழித்தும் மக்கள் அதை பரபரப்பாகப் பேசினார்கள்’ என்று எம்.ஜி.ஆர் விளக்கம் அளித்தார்.

எம்டன் குண்டு காரணமாக தெறித்த சேறு, எம்.ஜி.ஆரின் மீதும் பட்டிருப்பது ஒரு சரித்திர அடையாளம்தான்.

தொடரும்…

-தமிழ்மகன்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-20 (அது ஒரு அழகிய தூர்தர்ஷன் காலம்! )

அது ஒரு பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை மாலையும், ஞாயிற்றுக்கிழமை மாலையும் சென்னை மக்கள் தகிப்பார்கள். அலுவலகத்தில் இருந்து ஆறுமணிக்குள் வீட்டுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று பதறுவார்கள். குடிநீருக்காக சாலையைத் தோண்டுகிறார்கள் என்றால் கொலைவெறியர்களாக மாறிவிடுவார்கள். மின்சாரம் தடை பட்டால் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்வார்கள்.


ரொம்ப சஸ்பென்ஸ் வேண்டாம். வெள்ளிக்கிழமை தோறும் சென்னை தூர்தர்ஷனில் ‘ஒளியும் ஒலியும்’ என்ற தலைப்பில் ஐந்து அல்லது ஆறு திரைப்படப் பாடல்களை ஒளிபரப்புவார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் ஒரு சினிமா ஒளிபரப்புவார்கள். அதைப் பார்க்கத்தான் இப்படி ஒரு ஆவேசப் புறப்பாடு.

அந்த நாட்கள் என்று சொல்வது, 80-கள். மக்கள் அதற்காக காலையில் இருந்தே தயாராவதைப் பார்த்திருக்கிறேன். எல்லோருடைய வீடுகளிலும் டி.வி இருக்காது. தெருவுக்கு ஓரிருவர் வீட்டில் இருக்கும். தெரிந்தவர் நண்பர்கள் தயவோடு ஒளியும் ஒலியும் ஆரம்பிப்பதற்கு ஒருமணி நேரம் முன்னதாகவே வந்து காத்திருந்த தருணங்கள். ஒலியும் ஒளியும் என்றால், சம்பந்தப்பட்ட டி.வி. உரிமையாளர்கள் 25 காசு வசூலிப்பார்கள். சினிமாவுக்கு என்றால் 30 காசு. டி.வி. உரிமையாளர்கள் கிட்டத்தட்ட சேனல் உரிமையாளர்கள் போலத்தான். சில வீடுகளில் பாய் போட்டு அமர வைப்பார்கள். சில வீடுகளில் சிமெண்ட் தரையில் நெருக்கியடித்து உட்கார வேண்டியதுதான்.

கதவுகள் வைத்த சாலிடேர் டி.வி-கள்தான் பெரும்பாலும். அந்தக் கதவுகள், சொர்க்கத்தின் கதவுகளுக்கு சமம். அதைத் திறக்கும்போது அப்படி ஒரு பரவசம். கிராமங்களில் பஞ்சாயத்து அலுவலக வாசல்களில் மணல்குவித்து இடம் பிடிக்க அடிதடி நடக்கும். சென்னையில் மணலுக்கு வழி இல்லை என்பதால், டி.வி-க்கு நெருக்கமாக அமர்வதற்கு அலைபாய்வார்கள். சில டி.வி உரிமையாளர்கள் ஒளி ஒலிக்கு நடுவே டீ தருவார்கள்.

இவ்வளவு ஏற்பாடுகள் இருந்தும் தொலைக்காட்சியிலேயே சில தொழில்நுட்பத் தடங்கல்கள் ஏற்பட்டு, கோழி ஒன்று சதுரமாக முட்டைப் போட்டுவிட்டுத் திகைத்துப் போய் திரும்பிப் பார்க்கும் சிலைடு போட்டுவிடுவார்கள். தடங்கலுக்கு வருந்துகிறோம் என்ற சிலைடே தொலக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சி போல ஒளிபரப்பானது அப்போது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தடங்கல்கள் வரும். உடனே தாமரை, அல்லி, ரோஜா போன்ற மலர்களைக் காட்டுவார்கள். சில நேரங்கள் நான்கு பாடல்களிலேயே ஒலியும் ஒளியும் முடிந்துபோகும். ஏதோ இடைவேளையின்போதே தியேட்டரைவிட்டு வெளியே அனுப்பிவிட்டது மாதிரி புலம்புவார்கள்.

தொலைக்காட்சி தரும் தொல்லை போதாது என்று டி.வி. ஆன்டெனா ஒருபக்கம் தொல்லை கொடுக்கும். காற்றில் அது வேறு பக்கம் திரும்பிவிட்டாலும் டி.வி-யில் படம் தெரியாது. உடனே மொட்டை மாடிக்கு ஓடி, ஆன்டெனாவை இப்படியும் அப்படியுமாகத் திருப்புவார்கள். கீழே இருந்து ஒருவர், ‘இன்னும் கொஞ்சம் லெஃப்ட், இல்லை ரைட்.. மொதல்லயே சரியா தெரிஞ்சது’ என்றபடி வழிகாட்டுவார்.

சில வேளைகளில் அசாம், மணிப்பூர் திரைப்படங்களையும் மொழி தெரியாமலேயே பார்த்துக்கொண்டிருப்போம். கீழே அவ்வப்போது ஆங்கிலத்தில் சப் டைட்டில் ஓடும். மக்களுக்கு வீட்டுக்குள் சினிமா நட்சத்திரங்களை தரிசிக்கும் திருப்தி அது. அன்றைய தூர்தர்ஷனுக்கு இருந்த மரியாதை இன்றைய 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

தூர்தரிஷனில் கிரிக்கெட் மேட்ச் ஒளிபரப்பும் நாட்களில் சில டி.வி. விற்கும் கடைகளில் கண்ணாடிக்கு அந்தப் புரத்தில் டி.வியை ஓடவிட்டிருப்பார்கள். சாலையில் நின்று மக்கள் பார்ப்பார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்தியிலே ஒளிபரப்பாகும் மகாபாரதத்தைப் பார்க்க வீட்டிலேயே உட்கார்ந்திருப்பார்கள். அதனால், தெருவில் கூட்டம் குறைவாக இருக்கும். ஏதோ ஒரு ஊரில் மகாபாரதம் வெளியான நேரத்தில் கரன்ட் போனதால் ட்ரான்ஸ்ஃபார்மர்களை அடித்து நொறுக்கினார்கள். அது தூர்தர்ஷனின் பொற்காலம்.

93-ம் ஆண்டில் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த சினிமா வார இதழ் நிறுவனம், முதன்முதலாக தொலைக்காட்சி சேனல் ஆரம்பித்தது. அன்றைய நாளில் தனியார் தொலைக்காட்சிக்குப் போதிய வரவேற்பு இல்லை. மேலும் கேபிள் டி.வி. சிஸ்டம் அப்போது இல்லை. அந்தத் தனியார் தொலைக்காட்சிக்கு என தனியாக ஒரு ஆன்டெனா வைக்க வேண்டியிருந்தது. அப்போதே அதன் விலை 12 ஆயிரம் ரூபாய். அதனால், பெரும்பாலானவர்கள் டி.வி-யும் வாங்கி அதற்கு இவ்வளவு விலைகொடுத்து ஆன்டெனாவும் வாங்குவதைத் தவிர்த்தனர்.

அந்த நாளில் அந்த சேனலுக்கு நடிகைகள் பேட்டி கொடுக்க மறுப்பார்கள். சில நேரங்களில் நான் வேலை பார்த்த சினிமா பத்திரிகையில் அவர்களின் பேட்டியைப் பிரசுரிப்பதாக இருந்தால் மட்டுமே டி.வி. சேனலுக்கு பேட்டி தருவதாக கன்டீஷன் போடுவார்கள்.

கேபிள் டி.வி. யுகம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. பல தனியார் தொலைக்காட்சிகள் வந்து அந்த பிம்பத்தை அடித்து நொறுக்கின. தடங்கலுக்கு வருந்தாத தனியார் சேனல்கள் ஒருவகையில் சமூக மாற்றத்துக்கான அடையாளம்தான்.
தொடரும்…


-தமிழ்மகன்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-19 (தி.நகரும்… பிள்ளையாரின் தம்பி பெயரும்!)

‘மனம்போல் முடிந்தது’ என்று ஒரு சிறுகதை. 1930-களில் வெளியான இந்த சிறுகதையை அன்றைய புகழ்பெற்ற எழுத்தாளர் எஸ்.வி.வி. எழுதினார்.


சாயந்திரம் ஐந்து மணி ஆகிவிட்டால் தி.நகர் ரங்கநாதன் தெரு ஆளரவம் அற்று அமானுஷ்யம் நிழலாடும். தி.நகர் ரங்கநாதன் தெருவில் யாருமற்ற மாலை வேளையில் நடந்த காதல் காட்சி ஒன்றை அந்தக் கதையிலே அவர் எழுதியிருக்கிறார்.

ஹம்சா வசிக்கும் ரங்கநாதன் தெருவைக் கடந்துதான் தினமும் ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்வான் ரங்கராமானுஜம். ஒருநாள் சாயந்திரம் 5.18-க்கு ரங்கராமானுஜம், ஹம்சா வீட்டண்டை வழக்கம்போல் வந்தான். ஹம்சாவும் வீட்டண்டை சுவரில் வழக்கம்போல் சாயந்துகொண்டிருந்தாள். தெரு நிசப்தமாக இருந்தது. இந்த வீட்டுக்கெதிரில் திடீரென்று நின்று ஏதோ தேடுகின்றவன் போல் ரங்கராமானுஜம் தரையைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஹம்சா உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே இதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் கண் எதையோ இழந்துவிட்டுத் தேடுகிற கண்ணாய்த் தென்படவில்லை. இவர்கள் பாஷைதான் இருவரும் ஒரே சமயத்தில் கற்றுக் கொண்டாயிற்றே!

சிறிது நேரம் கவனித்துவிட்டு, ”என்ன தேடுகிறீர்கள்?” என்றாள் ஹம்சா. ரங்கராமானுஜத்தின் இதயம் படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.

”அரை ரூபாய் காசு விழுந்துவிட்டது. தேடுகிறேன்” என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்துகொண்டு மறுபடி தேடுவதுபோல பாவனை பண்ணினான்.
”விழுந்தால் ஓசைப்பட்டிருக்குமே, ஓசை கேட்கவில்லையே” என்றாள்.

”இல்லை. விழுந்தது என்கிறேனே… என் ஜேபியில் இல்லையே”

”ஜேபியில் இல்லாவிட்டால் ஒருவேளை காபி கிளப்புக்குக்காரனிடத்தில் இருக்கிறதோ என்னவோ? ஞாபகப்படுத்திப் பாருங்கள்” என்றாள்.

நம்முடைய டக்கை இந்தப் பெண் கண்டுகொண்டுவிட்டாள் என்று ஒரு வெட்கம். எப்படியோ சங்கதி அவளுக்குத் தெரிந்துவிட்டது. அவளும் அநுகூலமான மனத்தோடு இருக்கிறாள் என்று நினைத்து சந்தோஷம். என்ன விஷமாமய்ப் பேசுகிறாள்… என்ன புத்திசாலி என்று வியப்பு…

-இப்படி போகிறது கதை. அவர்களுடைய காதல் விவகாரம் நம் மெட்ராஸ் தொடருக்கு தேவை இல்லாதது.

தி.நகர் ரங்கநாதன் தெரு எப்படி மாலை ஐந்து மணிக்கு ஆளரவம் இல்லாமல் இருந்தது என்பதைத்தான் பார்க்கப் போகிறோம். ’50 காசு நாணயம் கீழே விழுந்தால் சத்தம் கேட்டிருக்குமே’ என்பதையும் கவனிக்கவும்.

நான் 70-களில் பார்த்தபோது ரங்கநாதன் தெரு அப்படித்தான் இருந்தது. பழங்காலத்து வீடுகள் சில இருந்தன. சிலர் ரயில் வசதி கருதி தங்கள் வீடுகளை மேன்ஷன்களாக மாற்றி வைத்திருந்தனர். சில பால் வியாபாரிகள் தெருக்களில் பசுக்களை ஓட்டிவந்து, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட தெருவிலேயே பால் கறந்து கொடுப்பார்கள். சில வீடுகளில் தென்னை மரங்கள் இருக்கும். இளநீர் பறித்துத் தருவதற்கு சில மரம் ஏறிகள் அங்கே இடுப்பில் வெட்டுக் கத்தியோடு வருவார்கள்.

சில நல்ல மெஸ்-கள் அங்கே இருந்தன. 80-கள் வரை அங்கே நிலைமை அப்படித்தான் இருந்தது. வாகனங்கள் சுலபமாகச் செல்லும். ரங்கநாதன் தெருவில் நானே சைக்கிள் ஓட்டித் திரிந்திருக்கிறேன். 90-களின் தொடக்கத்தில்கூட சில பத்திரிகை நண்பர்கள் அந்த மேன்ஷன்களில் இருந்தனர். அம்பாள் மேன்ஷன் என்ற பெயர் நினைவிருக்கிறது.

சொல்லப்போனால் பாண்டி பஜார் என்ற பகுதியில்தான் கடைகள் அதிகம் இருந்தன. பனகல் பார்க் பக்கத்தில் சில துணிக்கடைகள் இருந்தன. நல்லி சில்க்ஸ் என்ற கடை அதில் பழசு. உஸ்மான் சாலையில் பல்லவன் பேருந்துகள் வேகமாக விரைந்துசெல்லும். இப்போது மனிதர்கள் நகர்ந்து செல்வதற்குக் கூட வாய்ப்பில்லாமல் போனதற்குப் பிள்ளையார் சுழி போட்டது, பிள்ளையாரின் தம்பியின் பெயரில் அமைந்த சரவணா ஸ்டோர்தான். எல்லா பொருளும் ஒரே இடத்தில் கிடைக்கும்; மலிவாகவும் இருக்கும் என்ற அவர்களின் தாரக மந்திரம் ஒட்டு மொத்த தி.நகரின் போக்குவரத்தையே மாற்றிப் போட்டுவிட்டது.

அவர்களின் வரிசையான கடைகள், அவர்களைப் போலவே மற்ற விற்பனையாளர்கள் ஆரம்பித்த கடைகள், அடுத்து படையெடுத்த நகைக்கடைகள்… மக்கள் அலைமோத ஆரம்பித்தனர்.

‘நகரத்து நெரிசலில் 
மனதுகூட நசுங்கிப் போனவர்கள்’ என்று கவிஞர் மு.மேத்தா எழுதிய கவிதை தி.நகரைப் பார்த்துதான் என நினைக்கிறேன்.

சென்னை வாசிகள் பெயரைச் சுருக்குவதில் கில்லாடிகள். நீதிக்கட்சியில் இருந்து சமூக நீதிக்காகப் போராடிய சௌந்திரபாண்டியனார் பெயரில் அமைந்த மார்க்கெட்டை பாண்டி பஜார் என்றனர். நீதிக்கட்சி போராளியான தியாகராயர் பெயரில் அமைந்த நகரை தி.நகர் என்றனர். நகரத்து நெரிசல், பெயர்களைக்கூட நசுக்கிவிடும் போல் இருக்கிறது.

தொடரும்…

-தமிழ்மகன்